மரபணு மாற்றப்பட்ட விதைகள் பயன்படுத்திய விவசாயிகளுக்கு இது ஒரு நல்ல பாடம்
3 மாதத்தில் பூக்க வேண்டியது 35 நாளில் பூத்த மக்காச்சோள பயிர்கள்: ஹை ஸ்பிரிட் என்ற பெயரில் தரமற்ற விதைகள் விற்பனை
திருமங்கலம் தாலுகாவில் தங்களாசேரி, அம்மாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இவர்கள் திருமங்கலம் உசிலம்பட்டி ரோட்டிலுள்ள தனியார் விதை மற்றும் உரவிற்பனை நிலையங்கள், கடைகளில் விதைகள் வாங்கி விதைத்துள்ளனர். இந்தாண்டு விவசாயிகளுக்கு மக்காச்சோளத்தில் ஹைஸ்பிரிட் விதை என்ற விதைகள் தரப்பட்டுள்ளன. இவை விதைத்த மூன்று மாதங்களில் பூத்து ஆறு மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். மக்காச்சோளம் தரமானதாக கிடைக்கும் என கூறி விற்றுள்ளனர். ஆனால் மூன்று மாதங்களில் பூக்க வேண்டிய பயிர் 35 நாள்களில் பூக்க துவங்கியுள்ளது. உயரம் குறைந்த நிலையில் பூத்துள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தக்களாசேரி விவசாயி பால்பாண்டி கூறுகையில், ''உயரம் குறைந்த நிலையில் பூத்துள்ள மக்காச்சோளத்தால் எனக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் தரமற்ற விதைகள்தான். விதைகள் வாங்கிய கடைகளில் கேட்டால் உங்களுக்கு விவசாயம் சரியாக செய்ய தெரியவில்லை என்கின்றனர். நான் கடந்த 2018ல் திருமங்கலம் தாலுகா அளவில் சிறந்த விவசாயிக்கான பரிசை தமிழக அரசிடமிருந்து பெற்றுள்ளேன்'' என்றார். திருமங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் சொர்ணபாரதியிடம் கேட்டபோது, ''திருமங்கலம் விவசாயிகள் பலர் தனியார் உரக்கடைகளில் விதைகள் வாங்கியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். தரமற்ற விதைகள் விற்பனை செய்வோர் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
Comments
Post a Comment