தேர்வு எழுதாமல் மாணவர்களின் கற்றல் தகுதி எப்படி தீர்மானிக்க முடியும்?
திண்டுக்கல் வேம்பார்பட்டியை சேர்ந்த நித்தியானந்தன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
திண்டுக்கல் தனியார் பொறியியல் கல்லூரியில் 2015-ல் சேர்ந்தேன். 2019-ல் படிப்பு முடிந்தது. ஆனால் 14 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. தற்போது அரியர் தேர்வுகளை எழுத தமிழக அரசு அனுமதி வழங்கியதால் மே 23-ல் 14 பாடங்களுக்கும் சேர்த்து ரூ. 2100 கட்டணம் செலுத்தினேன்.
ஆனால் தேர்வு எழுத அனுமதி வழங்கி எனக்கு மின்னஞ்சல் வரவில்லை. கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டும் முறையான பதில் கிடைக்கிவில்லை.
எனவே அரியல் தேர்வு எழுதும் மாணவர்களுடன் சேர்ந்து என்னையும் தேர்வெழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.எம்.ஆனந்தமுருகன் வாதிட்டார்.
பின்னர் நீதிபதி, தேர்வு எழுதாமல் மாணவர்களின் கற்றல் தகுதி எப்படி தீர்மானிக்க முடியும்? தேர்வுக் கட்டணம் செலுத்தினாலே, தேர்ச்சி என அரசு அறிவித்துள்ள நிலையில், மனுதாரர் கட்டணம் செலுத்தி, தேர்வெழுதவும் அனுமதி கேட்கிறார். அவரை தேர்வெழுத அனுமதிப்பதில் என்ன சிரமம்? என கேள்வி எழுப்பினார்.
மனு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக். 9-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Comments
Post a Comment