ஒரே ஆண்டில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாது!
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நபர்களின் ரத்தத்தில் ஆன்டிபாடிகள் வலுவிழந்தாலும், டி-செல்கள் வைரஸ் தகவல்களை கொண்டிருப்பதால் மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு குறைவு என்கின்றனர். சி.என்.என்., செய்தி சேனலின் பிரபல பத்திரிகையாளர் ரிச்சர்ட் க்வெஸ்ட் (58) இது பற்றி தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றிலிருந்து மீண்டார். தனது அறிகுறிகள் அப்போது மோசமானதாக இருந்தது. வறட்டு இருமல் இருந்தது. சுவாச பிரச்னை இல்லை என கூறியுள்ளார். குணமடைந்த பின்பு, இனி தொற்று ஏற்படாது என எண்ணி மகிழ்ச்சியில் இருந்தவருக்கு, கடந்த வெள்ளியன்று ஆன்டிபாடி சோதனை செய்த போது நெகடிவ் என்று வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளார்
ஆன்டிபாடி சோதனையில் பாசிடிவ் வந்தால் வைரஸ் தொற்று ஏற்பட்டு அதற்கான எதிர்ப்பு பொருள் உடலில் உள்ளது என அர்த்தம். நெகடிவ் என்று வந்தால் வைரஸ் தொற்று ஏற்படவில்லை என பொருள். அதாவது தொற்றிலிருந்து குணமடைந்த ஒருவருக்கு சில நாட்களில் இது நெகடிவாக இருந்தால் அவர் மீண்டும் தொற்றுநோய்க்கு ஆளாகலாம். இது பற்றி நியூயார்க்கில் உள்ள தொற்றுநோய் மருத்துவரிடம் ரிச்சர்ட் கேட்டுள்ளார்.
அதற்கு அவர், 90 நாட்களில் ஆன்டிபாடிகள் பலவீனமடைந்து குறைந்து வருவதை ஆய்வுகள் பலவும் நிரூபித்திருப்பதாக கூறியுள்ளார். இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. உடலின் தற்காப்பு இயக்கத்தில் பாதி மட்டுமே ஆன்டிபாடிகள். நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் தாக்குதல் சக்தியின் முக்கிய அங்கமான டி செல்கள் வைரஸ் நினைவகத்தைக் கொண்டுள்ளன என்கிறார். இவை அமைதியாக இருக்கும். மீண்டும் தொற்று ஏற்படும் போது ஆன்டிபாடிகளை அதிகரித்து அவற்றை விரட்டும் எனவே ஒரே ஆண்டில் மீண்டும் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என கூறியுள்ளார்.
Comments
Post a Comment