அரியர் விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி!
இறுதி செமஸ்டர் தேர்வு தவிர, பிற செமஸ்டர் தேர்வுக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு, தேர்வு எழுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, உரிய மதிப்பெண் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.ஏற்கனவே, இளநிலை பட்டப்படிப்பில், முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் பயிலும் மாணவர்களுக்கும், தொழில்நுட்ப பட்டயப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கும், முதுநிலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், எம்.சி.ஏ., முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், நடப்பு செமஸ்டர் தேர்வில் மட்டும் விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்கு செல்ல ஜூலை 23ல் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:கொரோனா நோய் தொற்று காரணமாக, உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி, தமிழக அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும், பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு (ஏ.ஐ.சி.டி.இ.,) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படியும், மாணவர்களின் கோரிக்கையை ஏற்றும் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, இறுதி செமஸ்டர் தேர்வு தவிர, பிற செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கும், தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து மதிப்பெண்கள் வழங்கப்படும். இதுகுறித்து விரிவான ஒரு அரசாணையை உயர்கல்வி துறை வெளியிடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment