நாடு முழுவதும் செப்., 1 முதல் நவ., 14ம் தேதி வரை, படிப்படியாக மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்த புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் செப்., 1 முதல் நவ., 14ம் தேதி வரை, படிப்படியாக மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்த புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்களின் படி, 'முதல் 15 நாட்கள், 10 மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவர்கள் மட்டுமே வகுப்புகளில் பங்கேற்க வேண்டும். பத்தாம் வகுப்பில் நான்கு பிரிவுகள் இருந்தால், பிரிவு 'ஏ' மற்றும் பிரிவு 'சி' வகுப்பை சேர்ந்த பாதி எண்ணிக்கையிலான மாணவர்கள் குறிப்பிட்ட நாளில் வர வேண்டும். மற்றவர்கள் மீதமுள்ள நாட்களில் வர வேண்டும். பள்ளிகள், 5 முதல் 6 மணி நேரம் மட்டுமே இயங்க வேண்டும். இதில் மாணவர்கள் 2 முதல் 3 மணிநேரம் வகுப்பில் பங்கேற்க வேண்டும்.
அனைத்து பள்ளிகளும் ஷிப்ட் முறையில் இயங்க வேண்டும். காலை 8:00 முதல் 11:00 மணி, 12:00 முதல் 3:00 மணி என, கிருமிநாசினி கொண்டு வகுப்பறைகளை சுத்தப்படுத்த வசதியாக, 1 மணி நேரம் இடைவெளியுடன் வகுப்புகளைத் துவங்க வேண்டும். பள்ளிகள் 33 சதவீத ஆசிரியர், பணியாளர்கள், மாணவர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வழிமுறைகள் குறித்து, கொரோனா தொடர்பாக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழுவுடன் இணைந்து செயல்படும் செயலர்கள் குழுவால் விவாதிக்கப்பட்டுள்ளன.பள்ளிகள் திறப்பு தொடர்பாக வழிகாட்டுதல்கள், தளர்வுடன் கூடிய ஊரடங்கு முடிவடையும் ஆக., 31ம் தேதி வெளியிடப்படும் எனவும், மாநில அரசுகள் இறுதி முடிவு எடுத்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'தற்போதைய சூழலில், பிரைமரி பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு திரும்புவதில் மத்திய அரசு ஆதரவு அளிக்கவில்லை. 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் வருகை உறுதிப்படுத்தப்பட்ட பின், 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு குறிப்பிட்ட நேர கட்டுப்பாடுடன் வகுப்புகளை துவங்கலாம். சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் எவ்வாறு பாதுகாப்பாக மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு திரும்பினர் என்பதை ஆராய்ந்து, அதே மாதிரி இந்தியாவில் அமல்படுத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் அளித்த பேட்டியில், 'தற்போது எப்படி, எப்போது பள்ளிகளை திறக்க வேண்டும் என்பதை மதிப்பிடுவது மிகவும் முக்கியமானது. வகுப்பறையில் கற்பிக்கும் நேரத்திற்கு இடையூறு ஏற்படுவது குழந்தையின் கற்றல் திறனில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது வரும் நாட்களில் பள்ளிகளை அதிக முன்னுரிமைகளில் ஒன்றாக மாற்றும். குழந்தைகளை பள்ளியிலிருந்து ஒதுக்கி வைப்பதில் குழந்தை திருமணம், குடும்ப வன்முறை போன்ற பல ஆபத்துகள் இருக்கிறது' என, எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment